மகாராஷ்டிர மாநிலத்தில், இந்து, பௌத்தர் மற்றும் சீக்கியர் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள பட்டியல் சாதி (SC) சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மாநில சட்டமன்ற மேலவையில் நடைபெற்ற ‘கவனம் கோரும்’ தீர்மான விவாதத்திற்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், “மதமாற்றம் தொடர்பான மோசடி வழக்குகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை மாநில அரசு கொண்டுவரும். 2024 நவம்பர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், எஸ்சி இடஒதுக்கீடுஇந்து, பௌத்தர், சீக்கியர், மற்றும் சீக்கியர் சமுதாயங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
“இதனையடுத்து, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள எஸ்சி சான்றிதழ்கள் செல்லாததாக அறிவிக்கப்படும். அவர்கள் அரசு வேலைகள் மற்றும் பிற சலுகைகளைப் பெற்றிருந்தால், அந்தச் சான்றிதழ்கள் உரிய வழிமுறையுடன் ரத்து செய்யப்படும். மேலும், மோசடி மூலம் பெற்ற நன்மைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,” என அவர் கூறினார்.
மேலும், மதமாற்றங்களை தடுக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மசோதையாக கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஃபட்னாவிஸ் கூறினார்.
இதை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அமித் கோர்கே, “மத சுதந்திரம் என்ற பெயரில் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தும் நடைமுறைகள் அதிகரித்துள்ளன” எனக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.