அடுத்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக அணியின் முக்கிய தூணாக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவில் இணைந்துள்ளார். இந்த வர்த்தகத்தை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மாற்றத்துக்குப் பின்னணி
2025 ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட மோசமான முடிவுகளுக்குப் பிறகு 2026 சீசனில் வலுவான கம்பேக் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. அதற்காக அணியில் பல மாற்றங்களை மதிப்பீடு செய்த சிஎஸ்கே, விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன் இடத்தை பல ஆண்டுகளாக நிலைத்திருக்கும் சிக்கலாக கணித்து புதிய தீர்வைத் தேடியது.
மூன்று தொடர்களாக தோனிக்கு நிகரான மாற்று வீரரை உறுதிசெய்ய முடியாத சூழலில், அனுபவமும் திறமையும் கொண்ட சஞ்சு சாம்சன் மீது சிஎஸ்கே நம்பிக்கை வைத்தது. இதை அறிந்த ராஜஸ்தான் ராயல்ஸ், ஜடேஜா உள்ளிட்ட பலர் தொடர்பான முன்மொழிவுகளை வைத்திருந்தாலும், இறுதியில் ஜடேஜா–சாம் கரன் கூட்டணியை மாற்று வீரர்களாக வழங்க சிஎஸ்கே சம்மதித்தது.
ரஜினமான வர்த்தகம் நிறைவேறியது
ராஜஸ்தானிடமிருந்து சஞ்சு சாம்சனைப் பெறும் வகையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை சிஎஸ்கே அனுப்ப ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. கடந்த ஐந்து ஐபிஎல் சீசன்களாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், 2022 சீசனில் தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர்.
சிஎஸ்கேவின் நன்றி & வரவேற்பு
அதிகாரப்பூர்வ அறிக்கையில் சிஎஸ்கே,
“ஜடேஜா மற்றும் கரண் இருவருடனும் பேசியபிறகு பரஸ்பர புரிதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜடேஜாவின் அசாதாரண பங்களிப்புகளுக்கும், அவர் விட்டுச் சென்ற மரபுக்கும் நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஜடேஜா மற்றும் கரண் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
அதேபோல சஞ்சு சாம்சனையும் நாங்கள் வரவேற்கிறோம், அவருடைய திறமைகளும், சாதனைகளும் எங்கள் லட்சியத்திற்கான பார்வையை நிறைவு செய்வதாக உள்ளன. இந்த முடிவு மிகவும் யோசிக்கப்பட்டு நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ளது”
2012 முதல் அணிக்காக விளையாடி 2018, 2021 மற்றும் 2023 கோப்பைகளில் முக்கிய பங்கு வகித்த ஜடேஜாவின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், சஞ்சு சாம்சனின் வரவு அணியில் புதிய ஒரு கட்டத்தை அமைக்கும் என நம்பப்படுகிறது.
















