தூய்மை பணியாளர்கள் போராட்டம் : 800 டன் குப்பை தேக்கம்

சென்னையில் எட்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் மொத்தம் 800 டன் குப்பை தேக்கமடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு மண்டலங்களில் குப்பை மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த 1,953 பேர், இங்கு தூய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தனியார்மயத்தால் ஊதியம் குறைக்கப்படுவதாக கூறி, ரிப்பன் மாளிகை முன் கூடாரம் அமைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எட்டாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, அதிகாரிகள் தரப்பில் “உங்கள் போராட்டத்தால், இரண்டு மண்டலங்களில் 800 டன் குப்பை தேங்கியுள்ளது. தற்போதைய சூழலில் வெளிநபர்கள் அதிகம் உள்ளனர். எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்” என கேட்டுக்கொண்டனர்.

ஆனால், தூய்மை பணியாளர்கள் தரப்பில் “எங்களுக்கு பணி பாதுகாப்பும் ஊதிய உறுதியும் வேண்டும். தனியார் விதிகளின்படி சில மாதங்களில் பணி நீக்கம் செய்யப்படலாம். எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால், 500 தூய்மை பணியாளர்களை அனுப்பி மண்டலங்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுவோம்” என்று தெரிவித்தனர்.

இரு தரப்பிற்கும் இடையே தீர்வு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என பணியாளர்கள் அறிவித்தனர். இதற்கிடையில், சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி போராட்ட தளத்திற்கு வந்து பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Exit mobile version