நிலுவையில் உள்ள சம்பளம்… தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கடலூர் மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சியில் பணிபுரியக்கூடிய 350-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணியாற்றுவதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். நாள் ஒன்றுக்கு 240 ரூபாய் என்ற அளவில் குறைந்த சம்பளமே வழங்குகிறார்கள் எனவும் அதையும் முறையாக வழங்காமலும், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கேட்டால் முறையாக பதிலளிக்காமலும் உள்ளதாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இதுவரை அந்த ஊதியம் முறையாக வழங்கப்படாததாலும், அறிவிக்கப்பட்ட தொகை குறைத்து வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிகளைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Exit mobile version