சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டம் குறித்து, “நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து யாரும் போராட்டம் நடத்த முடியாது; அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போராட்ட உரிமையை நீதிமன்றம் மறுக்கவில்லை என்றாலும், அது சட்டத்தின் வரம்பிற்குள், அரசின் அனுமதியுடன், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடக்க வேண்டும் எனவும் கூறியது.
இதற்கிடையில், ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “மாநகராட்சி நடவடிக்கையால் 2,000 துாய்மை பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும்” என வாதிடப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் தரப்பில், “இதுவரை 341 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்; மொத்தம் 1,900 பேர் தேவை. ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம் வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, போராட்டக்காரர்களுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
பின்னர், போலீசார் போராட்டக்காரர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மாலை நேரத்தில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.