தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத் தலைநகராகத் திகழும் தஞ்சாவூரில், நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரியில் தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் “கோலங்களில் சங்கமம்” மற்றும் “கரந்தை சங்கமம்” பொங்கல் திருவிழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. இளைய தலைமுறையினரிடையே தமிழர் மரபைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழாவில், கல்லூரியின் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
விழாவின் தொடக்கமாக, மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் “கோலங்களில் சங்கமம்” போட்டி நடைபெற்றது. இதில் 40 குழுக்களாகப் பிரிந்த 120 மாணவிகள், வண்ணமயமான பொடி மற்றும் பூக்களைக் கொண்டு தமிழர் வாழ்வியலைச் சித்தரிக்கும் வகையில் கண்கவர் கோலங்களை வரைந்து அசத்தினர். இதனைத் தொடர்ந்து, வீரத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் ஆர்வத்துடன் மோதி தங்களது பலத்தை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவின் முத்தாய்ப்பாக, கரந்தை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து “கரந்தை சங்கமம்” என்ற பெயரில் பிரம்மாண்ட பண்பாட்டுப் பேரணி புறப்பட்டது. இப்பேரணியில் குதிரை ஆட்டம், ஒட்டகப் பாவனை, மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் தாரை தம்பட்டம் போன்ற கிராமியக் கலைகள் அணிவகுத்துச் சென்றன. வானவேடிக்கைகள் அதிர, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் சென்ற இந்தப் பேரணி தஞ்சை மாநகரையே விழாக்கோலம் பூணச் செய்தது.
பேரணி கல்லூரி வளாகத்தை அடைந்ததும், மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ‘சமத்துவப் பொங்கல்’ விழா தொடங்கியது. இதனை கல்லூரியின் செயலாளர் சுந்தரவதனம், முதல்வர் ராஜாமணி மற்றும் நிறைவேற்றுக் கழக உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய மண் பானைகளில் மாணவிகள் புது அரிசியிட்டு “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட, மங்கல இசை முழங்க பொங்கல் பொங்கி வழிந்தது.
தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டான உறியடித்தல் போட்டி மற்றும் “வெட்டவெளி பாட்டுக்காரன்” குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணின் மணத்தைக் காற்றில் பரவச் செய்த இந்தப் பாடல்கள் அனைவரையும் தாளமிட வைத்தன. விழாவின் நிறைவாக, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குக் கல்லூரி நிர்வாகத்தினர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். கல்லூரி முதல்வர் ராஜாமணி நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வானது, கல்வி நிறுவனங்கள் வெறும் பாடங்களைக் கற்பிக்கும் இடமாக மட்டுமல்லாமல், பண்பாட்டைக் காக்கும் கூடாரமாகவும் திகழ்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது.

















