: தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (CEO Office) முன்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி பெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டன.
தேனி பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலக நுழைவாயிலில் திரண்ட ஆசிரியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜயேந்திர பிரபு தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் மாசாணன், துணைச் செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வேல்முருகன், சதீஷ் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “ஒரே தகுதியுடன், ஒரே பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இடையில் நியமன தேதியின் அடிப்படையில் ஊதிய மாறுபாடு இருப்பது பெரும் அநீதி. 2009-ஆம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை பல ஆண்டுகளாகப் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும்” என வலியுறுத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேனி மாவட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் குதித்ததால், தேனி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள பல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் கல்விப் பணிகளைப் பாதித்துள்ளதால், அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இருப்பினும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். மாலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் எனத் தெரிகிறது.














