சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு, இந்தாண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, குங்குமம், ஷாம்பு, சோப்பு போன்ற மதசார்பற்ற அல்லது தேவையற்ற பொருட்கள் விற்பனை மற்றும் எடுத்துச் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தெய்வஸ்தான வாரியம் (Travancore Devaswom Board) மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகள் இணைந்து வெளியிட்ட புதிய அறிவிப்பில், சபரிமலைக்கு செல்லும் பாதையில் (நிலக்கல் முதல் சன்னிதானம் வரை) விற்பனை செய்யப்படும். பொருட்களுக்கான கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.முன்னதாக, யாத்திரைக் காலத்தில் சில கடைகள் மதநெறி மீறிய பொருட்களை விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, ஷாம்பு பாக்கெட், குளியல் சோப்பு, வாசனை திரவம், குங்குமம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கேரளா உயர் நீதிமன்றம் “சபரிமலை யாத்திரையின் ஆன்மீகத் தன்மையை காப்பதற்காக தேவையற்ற வணிகச் செயல்பாடுகளை தடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்படி, இந்த முறை கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.
மண்டல பூஜை தொடங்கும் நவம்பர் 17 முதல் ஜனவரி 20 வரை, அனைத்து கடைகளும் அரசின் அனுமதி பெற்று மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் கடை மூடல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் முன், தேவையான பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலிருந்தே வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணும் நோக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்த ஆண்டு, கோவில் திறப்பு நிகழ்ச்சி மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்ற நிலையில், இந்த முறை 50 லட்சம் வரை வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















