சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவ அருள்வாக்கின் அடிப்படையில், மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரக கோவிலின் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள் (ஜூலை 13) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஜூலை 11) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நடைதிறப்பு, தந்திரி கண்டரரு ராஜீவருவின் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் நடைபெறும். நாளை (ஜூலை 12) கோவிலில் சுத்தி கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
நவக்கிரக பிரதிஷ்டை நடைபெறும் நாளின் இரவு, வழக்கமான பூஜைகள் முடிந்த பிறகு, கோவில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
மேலும், ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதையொட்டி, கோவில் நடை வருகிற ஜூலை 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து, ஜூலை 17 முதல் 21 வரை ஐந்து நாட்கள் ஆடி மாதத்திற்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
இந்த நாட்களில் தரிசனம் செய்ய, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.