ஆந்திராவில் சிரஞ்சீவியே கட்சியை கலைத்தார் : நடிகர் விஜய்க்கு எஸ்.பி. வேலுமணி பதில்

“ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை திரட்டி கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவியே, இறுதியில் தனது கட்சியை கலைத்து விட்டு விட்டார். அப்படியிருக்க, ‘இபிஎஸ் யார்?’ என்று தெரியாது என்கிற நடிகர் விஜய் அரசியலில் என்ன சாதிக்க முடியும்?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்தார்.

மதுரையில் செப்டம்பர் 1ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

“திமுக ஒரு முறை ஆட்சி அமைத்தால் மறுமுறை வரமுடியாது என்ற வரலாறு தொடர்ந்தே இருக்கும். அது 2026-லும் உறுதி.

நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். இப்போது விஜயும் வந்துள்ளார். அவர் மதுரை மாநாட்டில் பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.

யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல மாட்டோம். அவரின் படங்களை நாங்களும் ரசிப்போம். ஆனால், எங்கள் தலைவரை (இபிஎஸ்) பார்த்தும் ‘அதிமுகவுக்கு தலைவர் யாரென்று தெரியவில்லை’ என்று பேசுவது பொருந்தாது. இபிஎஸ் போன்ற தலைவரை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது.

மேலும், “சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சிக்காக திரட்டிய பெரும் கூட்டங்கள் இன்று எங்கே? கட்சியே கலைந்து போய்விட்டது. அதுபோல எவராலும் எங்கள் தலைவரை குறைக்க முடியாது. 53 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அதிமுக, 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது எடப்பாடி பழனிசாமியே முதல்வர் ஆவார். இதை விஜய் மட்டுமல்ல, யாராலும் தடுக்க முடியாது” என்று வேலுமணி வலியுறுத்தினார்.

Exit mobile version