மாஸ்கோ :
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இருநாட்டு உறவுகளில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கும் இந்த முடிவு, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள் ஏற்கனவே சுயமாக கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகளை இனிமேல் பின்பற்றமாட்டோம். குறுகிய மற்றும் நீண்ட தூர அணு ஆயுதங்களை தயாராக வைத்திருக்கும் முடிவில் இருந்து விலகுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அணு சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் அதன் எல்லைக்கு அருகே அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இந்த செயல் ரஷ்யாவை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது :
“தடுக்கப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இன்று உலக நாடுகளின் இயல்பான வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அமெரிக்கா தற்போது சர்வதேசத்தில் தனது ஆதிக்கத்தை இழக்க தொடங்கிய நிலையில், புதிய காலனித்துவ போக்கில் செயல்படுகிறது. தனது கட்டுப்பாட்டில் இல்லாத நாடுகளின் மீது பொருளாதார அழுத்தம் செலுத்துகிறது.
குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் வரி விதிப்பது, அந்த நாடுகளின் இறையாண்மையை நேரடியாக ஆக்கிரமிப்பதற்கே சமம். இதுவே இந்தியாவுக்கும் தற்போது பொருந்துகிறது.”
அவர் மேலும் தெரிவித்ததாவது :
“வரிப்போர் மற்றும் பொருளாதார தடைகள் வரலாற்றின் இயல்பான முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. குளோபல் சவுத் எனப்படும் ஏழை நாடுகள், மற்றும் பிரிக்ஸ் கூட்டணியிலுள்ள நாடுகள் அனைத்தும் தற்போது எங்களுக்குத் துணையாக உள்ளன. மந்தமான பொருளாதார வளர்ச்சி கொண்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள், உலக விநியோகச் சங்கிலியை பாதிக்கின்றன. ஒருபோதும் மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்திருந்த ‘தடையற்ற வர்த்தக’ கொள்கையை இன்று அவர்கள் தாமே மீறி அரசியல் நோக்கில் வரி விதிக்கின்றனர்.”