மாஸ்கோ : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் செயல்பட்டு வரும் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இதன் மூலம், தலிபான் ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டு பிறகு, அவர்களை அரசு எனத் தனிப்பட்ட முறையில் அங்கீகரித்துள்ள முதல் முக்கிய உலக நாடு ரஷ்யா ஆகும்.
இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிப்பதற்கான இந்த முடிவு, இருநாடுகளுக்கும் இடையே பல துறைகளில் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் அரசால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதராக குல் ஹசன் ஹாசனை ரஷ்யா ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கன் தூதர் ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தலிபான் அரசு பாராட்டியுள்ளது. இது தொடர்பாக தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் தெரிவித்ததாவது: “ரஷ்யா எடுத்துள்ள இந்த தீர்மானம், இருநாடுகளுக்குமான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய வரலாற்று பருவம்” என்றார்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும், ரஷ்யா தனது தூதரகத்தை காபூலில் தொடர்ந்து செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தலிபான் அரசு அமைந்த பிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய தூதுவரை ஏற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும், அவர்கள் தலிபான் அரசை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.