பெங்களூரு : கர்நாடக சட்டசபை கூட்டத் தொடரில் ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதமான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே…’ எனும் பாடலை சிவகுமார் பாடினார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. துணை முதல்வர் பா.ஜ.வில் இணையப்போகிறார் என்ற அரசியல் வதந்திகளும் கிளம்பின.
இந்நிலையில், குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.டி. ரங்கநாத், “அந்தப் பாடலில் தவறேதும் இல்லை. நல்ல கருத்துகளை அரசியல் சார்பின்றி பாராட்ட வேண்டும்” என சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத், “மாநில காங்கிரஸ் தலைவராக ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடுவது பொருத்தமற்றது. எனவே சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்த துணை முதல்வர், “நான் உண்மையான காங்கிரஸ்காரன். பா.ஜ.வில் இணையவேண்டும் என்ற எண்ணமில்லை. சில அமைப்புகளில் நல்ல குணங்கள் இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டும் என்பதற்காக தான் பாடினேன்” என்று கூறினார்.
தொடர்ந்து ஏற்பட்ட விவாதத்துக்குப் பிறகு, “என் செயல் யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இதை நான் அரசியல் அழுத்தத்தில் செய்யவில்லை” என்று சிவகுமார் தெளிவுபடுத்தினார்.