ரூ.2,796 கோடி அளவிலான முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி, தன்னுடைய ‘ராகாஸ்’ நிறுவனங்கள் வழியாக ‘யெஸ் வங்கி’யில் இருந்து ரூ.3,000 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடன் தொகையை ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்று, சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அனில் அம்பானி மீது ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி தொடர்பாக இரண்டு தனி வழக்குகள் CBI-யால் பதிவு செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. கடந்த மாதம் மும்பை மற்றும் டெல்லியில், அனில் அம்பானிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தியது.
இந்நிலையில், ரூ.2,796 கோடி முறைகேடு தொடர்பாக அனில் அம்பானி மற்றும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ராணா கபூருக்கு எதிராக சிபிஐ தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
