தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்திலும் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தற்போது காளைகளையும், காளையர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகி ஜோயல் சாம் ஆசிர், வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் பிரம்மாண்டமான பரிசுகளை அறிவித்து ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த ஜோயல் சாம் ஆசிர், ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். நடிகர் விஜய் மீதான அளவற்ற பற்றின் காரணமாகவும், அவரது அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டும், தனது ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார். கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், தற்போது மதுரை மாவட்ட விவசாயக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழநெடுங்குளம் பகுதியில் நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய இரு இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “ராயல் என்பீல்டு” புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும். அதேபோல், மைதானத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து வெற்றி பெறும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தலா 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்தப் பரிசுகள் அனைத்தும் கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் ஆசியுடன் வழங்கப்பட உள்ளது ஒரு முக்கிய அம்சமாகும்.
வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள புல்லட் பைக்கின் சாவி மற்றும் ரொக்கப் பணத்தை முதலில் சென்னைக்குக் கொண்டு சென்று, கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் காட்டி ஆசி பெற்று, அதன் பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, உலகப் புகழ்பெற்ற இந்த வீர விளையாட்டைக் காணத் தங்களது தலைவர் விஜய் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜோயல் சாம் ஆசிர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியை உதறிவிட்டு, தளபதியின் வழியில் மக்கள் பணியாற்ற வந்துள்ள நிர்வாகியின் இந்த அதிரடி அறிவிப்பு, மதுரை மண்டல த.வெ.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர் மத்தியில் இந்த அறிவிப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

















