சென்னை:
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின்படி, கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் கருக்கா வினோத்துக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக உள்ள மற்றொரு வழக்கில், அவர் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி பாண்டியராஜ் முன் ஆஜரான கருக்கா வினோத், “ஆளுநர் மாளிகை வழக்கில் எனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என முழக்கமிட்டபடி, தன் காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடக்கும் முன்பே சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக வினோத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சமாளித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து, இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல், காணொளி வழியாகவே (Video Conferencing) ஆஜர்படுத்துமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
