சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ராட்விலர் நாயின் தாக்குதலில் சிக்கி, படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் வேலு என்பவர், தனது வீட்டில் வெளிநாட்டு உயர் ரக நாயான ராட்விலரை வளர்த்து வந்தார். இதே வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் ராஜா என்பவர் குடியேறியுள்ளார்.
நேற்று மாலை, ராஜாவின் மகள் ஸ்மித்திகா ஶ்ரீ (வயது 7), வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்று திரும்பும் போது, வாசலில் இருந்த ராட்விலர் நாய் திடீரென சிறுமியின் மீது பாய்ந்தது. முகத்தில் கடித்து குதறிய அந்த நாயின் தாக்குதலால் சிறுமி துடித்தார்.
சம்பவத்தை பார்த்த தந்தை ராஜா பயந்த நிலையில் நாயை விரட்டி, குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது சிறுமி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் பெற்ற ஆர்.கே. நகர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாயின் உரிமையாளர் வேலுவிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், நாயின் கட்டுப்பாடு குறித்த முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.