கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
‘ரோலக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை கடந்த சில மாதங்களாக நரசீபுரம், தாளியூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, அந்த யானையை அடர்ந்த காடு பகுதிக்கு மாற்றக் கோரிக்கை வைத்தனர்.
யானை பிடிக்கும் நடவடிக்கை
உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் வனத்துறையினர் ‘ரோலக்ஸ்’ யானையை பிடித்து இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக டாப்சிலிப் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் (நரசிம்மன், முத்து, கபில்தேவ்) கொண்டு வரப்பட்டு தாளியூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், வனக் கால்நடை மருத்துவர்கள் தினமும் யானையை கண்காணித்து, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர்.
மருத்துவரை தாக்கிய ரோலக்ஸ்
இந்நிலையில் இன்று அதிகாலை, பரமேஸ்வரன்பாளையம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் யானை இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழு அங்கு சென்றது. யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற போது, திடீரென ‘ரோலக்ஸ்’ விஜயராகவனை நோக்கி பாய்ந்து தும்பிக்கையால் தாக்கியது.
அங்கிருந்த பணியாளர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டியதால் உயிரிழப்பை தவிர்க்க முடிந்தது. உடனடியாக காயமடைந்த மருத்துவர் விஜயராகவன் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகில் எலும்பு முறிவு மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சத்தில் கிராம மக்கள்
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை மீண்டும் கிராமங்களுக்கு நுழையாமல் தடுக்க விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.