தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பிரம்மாண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் பாபு, நடராஜன் மற்றும் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தனர்.
பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் மற்றும் திருச்சி சாலை வழியாகச் சென்று முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவில் நிறைவடைந்தது. பேரணியின் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேகத்தைத் தவிர்க்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் போன்ற சாலை விதிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நேரில் வழங்கினர். இந்தப் பேரணியில் போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஆட்டோ, வேன், கார், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர், மினி பேருந்து மற்றும் தனியார் பேருந்து சங்க நிர்வாகிகள், இருசக்கர வாகன பழுது நீக்கும் சங்கத்தினர் எனப் பலதரப்பட்ட அமைப்பினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
குறிப்பாக, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பேரணியின் நிறைவாக, துறையூர் தீயணைப்புத் துறை சார்பில் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நேரடி விழிப்புணர்வு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் துறையூர் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலச்சந்தர், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல்சாகிப் மற்றும் போக்குவரத்து காவலர்கள் விக்னேஷ், அம்பிகா, முனிராஜ், பவித்ரா, காஞ்சனா, கலைவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். துறையூர் நகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்ததுடன், வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

















