மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலை பணி முடியும் வரை அனைத்துப் பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திச் செல்ல கோரிக்கை:- முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்தியதைக் கண்டித்து 30-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் கூட்டியக்கம் அறிவிப்பு
மயிலாடுதுறையில் இதுவரை காமராஜர் பேருந்து நிலையம், நகர பூங்கா பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் இயங்கி வந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டி அண்மையில் திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் வகையில் புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகர பூங்கா பேருந்து நிலையம் மூடப்பட்டதாலும், புறநகர் பேருந்துகள் எந்த வழியில் செல்கிறது என்ற அறிவிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதால், தினந்தோறும் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல் புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நகரப்பூங்காவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் பேராசிரியர் முரளிதரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை செயலாளர் மேகநாதன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் புறவழிச்சாலை பணிகள் முடிவடையாமல் எந்தவித முன்னறிவிப்பின்றி புறநகர் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாலைவசதிகளை ஏற்படுத்தும் வரை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் புறநகர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற திங்கட்கிழமை 30-ஆம்தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
