2025 ஆசியக் கோப்பை டி20 தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்காங், ஓமன் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகியவை ‘ஏ’ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகியவை ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ரியான் பராக் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வாகியுள்ளார்.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
48 பந்தில் 108 ரன்கள்
ஆசியக் கோப்பைக்கு முன் நடைபெற்ற யூபி டி20 லீக் போட்டியில் ரிங்கு சிங் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தினார். லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் மீருட் மேவரிக்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், 48 பந்துகளில் 7 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடித்து 225 ஸ்ட்ரைக் ரேட்டில் 108 ரன்கள் குவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 167 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய மேவரிக்ஸ் அணி, எட்டாவது ஓவரில் 38/4 என்ற மோசமான நிலையிலிருந்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங், சஹாப் யுவராஜ் (22 ரன்கள்) உடன் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் குவித்தார். கடைசி 14 பந்துகளில் மட்டும் 51 ரன்கள் அடித்த அவர், ஏழு பந்துகள் மீதமிருந்தபோதும் அணிக்கு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தார்.
ஆசியக் கோப்பைக்கு முன்பாகவே வெளிப்பட்ட இந்த அசத்தலான ஃபார்ம், ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் முக்கிய இடத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.















