சென்னை :
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானம் மூலம், ஆளுநரின் சட்டப் புறம்பான கருத்துகளை பேரவை நிராகரித்தது.
சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை ஏற்கனவே சட்டசபை நிறைவேற்றியிருந்த நிலையில், அதற்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் இருந்தார். இதையடுத்து, மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“இந்த மசோதா நிதிச் சட்டத்தின் கீழ் வருவதால், அரசமைப்புச் சட்டம் கூறு 207(3)-ன் படி ஆளுநரின் பரிந்துரை பெறப்படுகிறது. ஆனால், ஆளுநர் நடைமுறைக்குப் புறம்பாக சில கருத்துகளை இணைத்துள்ளார். பேரவைக்கு முன் விவாதிக்கப்படும் சட்ட முன்வடிவில் கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது,” என்றார்.
மேலும், “அவரது செய்தியில் ‘அப்ரோப்ரியேட் கன்சிடரேசன்’ எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேரவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் இருப்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது. சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டம் இயற்றும் அதிகாரம் இப்பேரவையிடமே உள்ளது. எனவே, ஆளுநரின் கருத்துகளை இப்பேரவை நிராகரிக்கிறது,” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆளுநரின் கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.