மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவரை மயிலாடுதுறையை அடுத்த ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே சுரேஷ்குமாருக்கு ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் இதுகுறித்து கலைவாணி கணவர் சுரேஷ்குமாரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடக்கூடாது, நான் அந்த பெண்ணுடன் தான் இருப்பேன் எனக் கூறியதுடன், கலைவாணிக்கு கொலை மிரட்டல் விடுத்து, சித்திரவதை செய்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி என்பதை கூறி தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கே வராத நிலையில் சுரேஷ்குமார் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கலைவாணி விசாரித்துள்ளார். அப்போது, சுரேஷ்குமார் ஏற்கனவே தொடர்பிலிருந்த பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி கலைவாணி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சித்திரவதை செய்த கணவர் சுரேஷ்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


















