சென்னை: மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைச் செயல்பாடு அதிகரித்துள்ளது. இந்த புயல் மாநிலத்திற்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தாத சூழலில் கூட, கடலோர மற்றும் உள்நாட்டு பகுதிகளில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஆறு நாட்களுக்கான மழை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 29ஆம் தேதி ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூரில் அதி கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நாளில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை போன்ற பகுதிகளிலும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
