கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்திக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி, இரு நகரங்களுக்குமான மெட்ரோ திட்டங்களை நிராகரித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை முன்வைத்த காரணங்கள் நியாயமானவை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் கொள்கை 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கின்படி, கோவை நகரின் உள்ளூர் திட்டப் பகுதி 2011-ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தை தாண்டியிருக்கிறது என்பதையும், மதுரையின் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையும் அரசின் நிபந்தனைகளுக்கு மேல் இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 20 லட்சம் மக்கள் தொகை என்ற ஒரே அளவுகோல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் ஆக்ரா, இந்தூர், பாட்னா போன்ற நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமலாக்கம் பெற முடியாது என்பதால், கோவை மற்றும் மதுரை திட்டங்களை அதே அடிப்படையில் தள்ளுபடி செய்வது பாகுபாடான அணுகுமுறையாகும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் மாநில அளவில் தடையாக இருக்காது என்றும், மத்திய அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்கத் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பி அனுப்பிய முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தேவைப்பட்டால், இத்திட்டங்களைப் பற்றி நேரடியாக விவாதிக்கவும் விளக்கம் அளிக்கவும் தாமே டெல்லி சென்று பிரதமரை சந்திக்க தயார் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
