பேச்சுக்கும் தயார் ; போருக்கும் தயார் – உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிராக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, இராஜதந்திர பேச்சுவார்த்தையோ அல்லது ஆயுத பலமோ பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புடின் கூறியதாவது:

“பொதுவான புரிதல் உருவானால், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம். ரஷ்யா எப்போதும் துாதரக வழிமுறைகளின் மூலமே அமைதியை விரும்புகிறது.

ஆனால், ஆயுத பலத்தின் மூலம் போரை முடிக்க வேண்டிய சூழல் வந்தாலும், அதற்கும் ரஷ்யா முழுமையாக தயார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்; ஆனால், அது மாஸ்கோவில் நடந்தால்தான் சாத்தியம்” என தெரிவித்தார்.

அதே சமயம், ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளில் மாற்றமில்லை என்பதையும் புடின் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக:

உக்ரைன் ‘நேட்டோ’ கூட்டமைப்பில் சேரும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக ரஷ்யா கட்டுப்பாட்டில் தொடர வேண்டும்.

இந்நிலையில், புடினின் “ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால்தான் பேச்சு” என்ற நிபந்தனையை உக்ரைன் மறுத்துள்ளது. மாறாக, நடுநிலை நாடுகளை பேச்சுவார்த்தை இடமாக முன்மொழிந்துள்ளது.

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

“புடினின் முன்மொழிவுகள் நயவஞ்சக தந்திரம் மட்டுமே. ஏற்றுக்கொள்ள முடியாத மிரட்டல்கள். ரஷ்யா தன் ஆக்கிரமிப்பை நிறுத்தி, உண்மையான சமாதான விருப்பத்தைக் காட்டாத வரையிலும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version