தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த பட்டியலை வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் கூறியதாவது: “மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தமாக 72,743 மாணவ, மாணவிகள் இந்த கல்விப்பாடங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்.”
7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம்:
நெல்லையை சேர்ந்த சூர்ய நாராயணன், NEET தேர்வில் 665 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த அபினீத் நாகராஜ் 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஹருதிக் விஜயராஜா, தரவரிசையில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
திருவள்ளூரைச் சேர்ந்த ராகேஷ் நான்காம் இடத்தையும், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.