பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி இடையேயான அதிகார மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இன்று நடைபெற்ற பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அந்த அவகாசத்திற்குள் விளக்கம் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பின்னணி
சமீபத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அவர் 2026 வரை தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 17 அன்று ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி பட்டானூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கு அன்புமணி பதிலளிக்கவில்லை. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முந்தைய காலக்கெடு முடிவடைந்த நிலையில், மீண்டும் அவகாசம் வழங்கி இன்று ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டுகள்
அன்புமணிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில :
பொதுக்கூட்டத்தில் மைக்கை தூக்கிப் போட்டது
பனையூரில் தொண்டர்களை சந்திக்க தனது தொலைபேசி எண் வழங்கியது
தைலாபுரத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் பங்கேற்காமல் தடுத்தது
சமூக ஊடகங்களில் ராமதாஸ் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியது
ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது
அனுமதியின்றி பொதுக்குழு கூட்டம் நடத்தி, ராமதாஸின் புகைப்படத்திற்கு துணி அணிவித்து “அவர் நல்ல புத்தி பெற வேண்டும்” என வேண்டுதல் வைக்கப்பட்டது
“உரிமை மீட்க, தலைமை காக்க” என்ற நடைபயணத்தை அனுமதி இன்றி நடத்தியது
மக்கள் தொலைக்காட்சி, பசுமைத் தாயகம் போன்ற அமைப்புகளை கைப்பற்ற முயன்றது
ராமதாஸிடம் பேசாத போதும், “40 முறை பேசினேன்” என பொதுவெளியில் தெரிவித்தது
ஜி.கே.மணி மருத்துவமனையில் இருக்கும் போது, கூட்டுப் பிரார்த்தனை குறித்து கேலி செய்தது
ராமதாஸ் எச்சரிக்கை
இன்றைய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
“வரும் 10ம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும். பதிலளிக்காவிட்டால் கட்சிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
