சிவகாசி:
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீண்டும் தனது பழைய சர்ச்சை பேச்சை நினைவூட்டியுள்ளார். “மத்திய அரசில் இருப்பது எங்கள் அய்யா மோடி தான்… எங்கள் டாடி தான்!” என்று அவர் உற்சாகமாக பேசியுள்ளார்.
முன்பு வெளியான அவரது “மோடி எங்கள் டாடி” கூற்று, அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகி இருந்தது. தற்போது அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிய நிலையில், அந்த வாசகத்தை மீண்டும் கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய ராஜேந்திர பாலாஜி, 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தடாலடி கருத்துக்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வந்த ராஜேந்திர பாலாஜி, “அம்மா ஆட்சிக்குப் பிறகு எங்கள் தலைமை மோடிதான். மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தான் தொடரும்” என்று முன்பே கூறியிருந்தார்.
அந்த பேச்சு அப்போது பெரும் விவாதத்தை கிளப்பியது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “அதிமுக பாஜகவிடம் அடகு பட்டுவிட்டது” என விமர்சனங்களை எழுப்பினர்.
இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. ஆனால் சமீபத்தில் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலை கூட்டாகச் சந்திக்க தீர்மானித்துள்ளன. இதையடுத்து அதிமுக தலைவர்கள் மீண்டும் பிரதமர் மோடியைப் பாராட்டும் வகையில் பேச்சுகள் வழங்கத் தொடங்கியுள்ளனர்.


















