விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகிய இரு காவலர்களும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கோயிலின் கொடிமரத்திற்கு அருகே கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியதாவது:
“கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கி, வெடிகுண்டு என சட்டம்-ஒழுங்கு தகர்ந்து போனது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா? பொம்மை முதல்வர் தலைமையிலான இந்த தோல்வி மாடல் அரசுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.”
அதேபோல், சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கி விளையாடும் இந்த ஆட்சி சட்டம்-ஒழுங்கை முழுமையாக சீரழித்துவிட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்,” என்று இபிஎஸ் வலியுறுத்தினார்.
இதேநேரத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“கோயில்களில் கூட இனி பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டதோடு, கோயிலின் உண்டியலிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களை கூட கொலைக்களமாக மாற்றிய திமுக ஆட்சியின் தோல்வி.”
மேலும் அவர் தெரிவித்தார்:
“திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் நடந்த கொலைக்கும், இக்கோவில் கொலைக்கும் காரணம் அதே சட்டம்-ஒழுங்கின் சரிவு தான். திறமையான அதிகாரிகளை அரசியல் காரணங்களால் பயன்படுத்தாததால் காவல்துறையின் மதிப்பு குறைந்துவிட்டது.”
“கொலை, கொள்ளைகளை தடுக்கத் தவறிய திமுக அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. வரும் தேர்தலில் இதற்கான பதிலை மக்கள் தருவார்கள்,” என்று அன்புமணி தெரிவித்தார்.
ராஜபாளையம் கோவில் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
