மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா, மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஶ்ரீகாந்த் தலைமையில் எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 106 பயனாளிகளுக்கு ஒரு கோடியே ஆறு லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியினை வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்து, அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.71 கோடி நிவாரண நிதி முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மயிலாடுதுறை நகரில் உள்ள சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வரும் ஜன.5-ம் தேதி காலை 10 மணிக்கு சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்படும். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பேருந்து நிலையம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் ஆகியன ஜன.15-ம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சினைக்குக்கு தீர்வு காணும் வகையில் ரூ.83 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய விஸ்தரிப்பு பணி, ஆறுபாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. நகரில் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஒடும் பகுதிகளில் லாரிகள் மூலம் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.
சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்
