காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தன் மீது காட்டும் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுயமரியாதை திருமணங்களுக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. முன்பு திமுகவும் காங்கிரசும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. ஆனால் இன்று, நாட்டின் ஒற்றுமையும் தமிழகத்தின் வளர்ச்சியும் கருதி ஒரே அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர், “காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கி வரும் ராகுல், என் மீது தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்துவார். அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர் என்னை எப்போதும் ‘மை டியர் பிரதர்’ என அழைப்பார்; நானும் அவரை ‘சகோதரர்’ எனப் பாசத்துடன் அழைப்பேன். என்னை தனது மூத்த அண்ணனாக ஏற்றுக்கொண்ட ராகுல், இன்று இந்திய மக்களின் குரலாக ஒலித்து வருகிறார்,” எனக் கூறினார்.
மேலும், “திமுக-காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தை காக்கும் உறவாக இருக்கும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வையுங்கள்,” என வாழ்த்தினார்.
 
			
















