புதுடில்லி: டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்.பி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, தெருநாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தடையிடுபவர்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், “நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் ராகுல், “டில்லியில் தெருநாய்களை பிடிப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவு, பல ஆண்டுகளாக இருந்து வரும் மனிதாபிமான அடிப்படையிலான, அறிவியல் பின்னணி கொண்ட கொள்கைகளில் இருந்து பின்வாங்கும் நடவடிக்கை ஆகும். குரலற்ற இந்த உயிரினங்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அல்ல. மொத்தமாக பிடித்துச் செல்வது கொடூரமானதும், குறுகிய பார்வையுடையதும், இரக்கமற்றதுமாகும். பொதுப் பாதுகாப்பும், விலங்குகளின் நலனும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
















