பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல் : சிஆர்பிஎப் புகார்

புதுடில்லி : வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக காங்கிரஸ் எம்.பி. மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சிஆர்பிஎப் புகார் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி, ‘Advanced Security Liaison’ உடன் கூடிய இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். அவருக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்னிட்டு, 24 மணி நேரமும் சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 10 பேர் மற்றும் போலீசார் உட்பட மொத்தம் 36 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் அடிக்கடி வெளிநாடு பயணம் செய்வது வழக்கம். சமீபத்தில் இத்தாலி, வியட்நாம், துபாய், கத்தார், லண்டன் மற்றும் மொரீஷியஸ் சென்றபோது, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் நடந்துகொண்டதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது.

‘Yellow Book’ நெறிமுறைகளின்படி, இசட் பிளஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பாதுகாப்பில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் முன் பாதுகாப்பு படையினருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் ராகுல் தொடர்ந்து இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.

இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு என்று சிஆர்பிஎப் எச்சரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு சிஆர்பிஎப் கடிதம் எழுதி, எதிர்காலத்தில் இவ்விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் ராகுல் மீது இதற்கு முன்பும் எழுந்துள்ளன. ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Exit mobile version