ராணுவத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
2022ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் சூழ்நிலையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துகள், இந்திய ஆயுதப்படையின் மரியாதையை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. ராகுல் இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும், அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இன்று லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த கூடுதல் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அலோக் வர்மா, ரூ.20,000 பிணைத் தொகையும், அதே தொகைக்கு இருவரின் பிணையும் விதித்து, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்