நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், அவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வேலையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் மேற்கொள்கிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு மாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை விவரித்து, ஆதாரங்களையும் வெளியிட்டார்.
ராகுல் குற்றச்சாட்டு :
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும் பின்னரும், லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறினார்.
குறிப்பாக, தலித், பழங்குடியினர், ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் வகையில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டுள்ளதாகவும், இதற்கு ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் மட்டும் 6,018 வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், அதில் மென்பொருள் வழியாக சில விநாடிகளுக்குள் பலர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பது சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும், “சாப்ட்வேர் மூலம் ஒரே எண்ணை உள்ளீடு செய்து, பல பூத்களில் உள்ள அதே வகை வாக்காளர்களை குறிவைத்து நீக்குகிறார்கள். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகள் அதிகமாக தாக்கப்பட்டுள்ளன” என்றார்.
போலீஸ் தகவல்:
கர்நாடகா சிஐடி போலீசார் கடந்த 18 மாதங்களில் தேர்தல் ஆணையத்திடம் 18 முறை கடிதம் எழுதி, ஐபி முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
2023 டிசம்பரிலேயே முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2025ம் ஆண்டு வரை பல முறை தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டும் பயனின்றி போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் முறைகேடு:
கர்நாடகாவுக்கு அப்பாற்பட்ட மஹாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் 6,850 பேர் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வாக்கு முறைகேடுகள் ஏற்கனவே நடந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, “வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்கும் அல்லது சேர்க்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கர்நாடகா சிஐடி போலீசார் கேட்ட தகவல்களை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.