அயர்லாந்தில் இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்திய சம்பவத்தில், டப்ளினில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத குழுவினர் தாக்கி பலத்த காயமடையச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியதாவது :
“நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் திடீரென வயிற்றில் உதைத்தார். பின்னர் இன்னும் இருவர் சேர்ந்து தாக்கினர். தரையில் விழுந்த பிறகும் அவர்கள் உதைத்தும் குத்தியும் தாக்கினர். ஒருவரோ தண்ணீர் பாட்டிலால் என் கண் பகுதியில் அடித்தார். அங்கு பலர் இருந்தும் யாரும் உதவி செய்யவில்லை. இறுதியில் இரண்டு இளைஞர்கள் போலீசாரை அழைத்தனர். விரைவில் இந்தியாவுக்கு திரும்பும் திட்டமிடல் செய்து விட்டேன்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் அவர் கண்ணுக்கு மேல் பலத்த காயம் அடைந்து எட்டு தையல்கள் போடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், “விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்” என்று தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 19ஆம் தேதி, 40 வயது இந்திய அமேசான் ஊழியர் ஒருவர், டப்ளின் டல்லாஹ்ட்டில் இளைஞர் கும்பலால் தாக்கப்பட்டார். அதற்கு பின், 32 வயது சந்தோஷ் யாதவ் என்பவரை ஆறு பேர் தாக்கி, கன்ன எலும்பு முறியச் செய்தனர். இதேபோல், ஆறு வயது இந்திய சிறுமி ஒருவரையும் சிறுவர் கும்பல் தாக்கி அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டியது.
இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் இந்தத் தாக்குதல்களை அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.