“மோடி வருகையில் ‘கோட்டா’ அரசியல்!” – மதுரையில் நிர்வாகிகளைப் புறக்கணித்து உறவினர்களுக்கு முன்னுரிமையா? பாஜகவில் வெடித்தது உள்வீட்டுப் பூசல்!

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அனுமதியில், தகுதியான நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு கடும் பாரபட்சம் காட்டப்பட்டதாகப் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. “கட்சிக்காக உழைப்பவர்களை விட, செல்வாக்கு மிக்கவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது” என்ற குற்றச்சாட்டு கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வரும்போது, அவர்களை வரவேற்கவும் வழியனுப்பவும் மாநில, மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்காகத் தீவிரமாகப் பணியாற்றுபவர்கள் மற்றும் இதுவரை பிரதமரைச் சந்திக்காத மூத்த நிர்வாகிகளின் பட்டியல் முன்கூட்டியே டெல்லிக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படும். ஆனால், கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மதுரைக்கு வந்தபோது, இந்த மரபார்ந்த நடைமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டதாகக் கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

குற்றச்சாட்டு குறித்துப் பேசிய பாஜக நிர்வாகிகள் சிலர், “பாஜகவின் ஒழுங்குமுறை தற்போது காங்கிரஸ் கலாச்சாரம் போல மாறிவிட்டது. டெல்லிக்கு அனுப்பப்படும் பட்டியலில் தகுதியான நிர்வாகிகளைத் தவிர்த்துவிட்டு, மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்குத் தொடர்பில்லாத நபர்கள் மற்றும் ஏற்கனவே பலமுறை பிரதமரைச் சந்தித்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப ‘கோட்டா’ அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,” என வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்புப் பட்டியலில் இடம்பெற்ற பலரும் கட்சிப் பதவியில் இல்லாதவர்கள் என்பதும், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் உண்மைத் தொண்டர்கள் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே காத்திருக்க வைக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், அது தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்தும்” என அதிருப்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். மதுரையில் அரங்கேறிய இந்த ‘சந்திப்பு சர்ச்சை’ குறித்துத் தலைமைக்குத் புகார் அனுப்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version