டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென நேற்று மாலை 6 மணி அளவில் திருவாரூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதே போல திருவாரூர், விளமல்,
மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 5 மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக மாலை 6 மணிக்கு ஆரம்பித்த மழை இரவு 10 மணி வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக கனமழையாக பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த 4 மணி நேரத்தில் திருவாரூரில் 10.8 சென்டிமீட்டர் மழை பொழிவும், நீடாமங்கலத்தில் 7.8 சென்டிமீட்டர் மழை பொழிவும், மன்னார்குடியில் 7.5சென்டிமீட்டர் மழை பொழிவும் இருந்ததாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிட்வா புயலில் இருந்து மீண்டு திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அடித்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்த நிலையில், திடீரென்று திருவாரூர் நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையானது திட்வா புயலின் போது பெய்த மழையை விட அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
