ஈசன் முருகசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற கோரி மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு :- மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வழங்க கோரி மனு :-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் திருநாளின் போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன்முருகசாமி மற்றும் 9 விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் மற்றும் நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி, ஈசன் முருகசாமியை பொய் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை நடத்துவதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் அல்லது கிட்டப்பா அங்காடி ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் இயற்கைவிவசாயி ராமலிங்கம் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர்.
விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தவும் இந்த போராட்டம் முக்கியமாக நடைபெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
