விழுப்புரத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸின் பேரன் சுகுந்தன் தலைமையில் ஏராளமான பாமக தொண்டர்கள் கையில் பதாகைகள் ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்திட தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளிமக்கள் கட்சியின் சார்பில் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் சென்னையிலும் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் பாட்டாளிமக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் பேரனும் அவரது ஆதரவாளராக உள்ள பாமக மாநில செயற்குழு உறுப்பினர் சுகுந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் ஒன்றிய செயலாளர் கோவிந்த வேலு மாவட்ட அமைப்பு செயலாளர் திரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் ஆதரவாளர்கள் 1000கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு “வன்னியர்களை வஞ்சிக்காதே” “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிடு” “உரிமைகளை பெறும்வரை ஓயமட்டோம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில்ஏந்தி கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
