ஆந்திராவில் வழங்கப்படுவதை போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தற்போது சாதாரண ஊனமுற்றோருக்கு வருவாய் துறை மூலம் ரூ.1500, கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத் திறனாளிகள் துறை மூலம் ரூ. 2,000 உதவித்தொகையாக வழங்கி வருகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களோடு ஒப்பிடும்போது இந்த தொகை மிக குறைவானது ஆகும். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை பொறுத்து ரூ 6,000 ரூ.10,000, ரூ.15,000 என மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது. எனவே ஆந்திராவில் வழங்கப்படுவதைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
