புதுடெல்லி :
பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கையை எதிர்த்து, பார்லிமென்ட் வளாகம் முன்பு இண்டி கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.
மழைக்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்திலிருந்தே பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் “சிறப்பு தீவிர ஆய்வு” என்ற பெயரில் நடக்கும் திருத்தம், அரசியல் நோக்கத்தில் திட்டமிடப்பட்டதாக குற்றம்சாட்டுகின
பார்லிமென்டின் இரு அவைகளிலும் – லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் – விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தன. எனினும், சபாநாயகர் அந்த நோட்டீஸை நிராகரித்ததை அடுத்து, லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதே நேரத்தில், ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்த தமிழக எம்.பிக்களுக்கான வழியனுப்பு நிகழ்வும் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பார்லிமென்டிலும் வெளிப்புறத்திலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மழைக்காலக் கூட்டத் தொடரின் ஒழுங்கு மீதும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.