இந்தியாவில் உள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம் மற்றும் பணியிட பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் என 4 சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த சட்டங்கள் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டங்கள் தொழிலாளர் நலனை பாதுகாக்கும் என மத்திய அரசு கூறினாலும், இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட சட்டம் என பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர், தொழிலாளர் சட்டங்களை 4 தொழிலாளர் தொகுப்பு சட்டமாக்கிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெகமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















