பிரதமர் மோடி பட்டச் சான்றிதழ் விவகாரம் – மத்திய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்விச் சான்றிதழ்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்திருந்த உத்தரவுகளை, டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வழங்கப்பட்டதாக பாஜக தரப்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த ஆவணங்கள் சந்தேகத்திற்குரியது என குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆர்வலர் நீரஜ் குமார், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள், மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி/தோல்வி விவரங்களை கோரி மனு தாக்கல் செய்தார். பல்கலைக்கழகம் அதை மூன்றாம் தரப்பு தகவல் எனக் கூறி மறுத்த நிலையில், 2016ஆம் ஆண்டு மத்திய தகவல் ஆணையம் அந்த விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, “மதிப்பெண் பட்டியல், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை தனிப்பட்ட தகவல்களில் ஒன்றாகும். பொதுப் பதவியில் இருப்பவருக்குக் கூட அவை RTI சட்டத்தின் கீழ் நேரடியாக வெளியிடப்பட முடியாது” என்று தெரிவித்து, மத்திய தகவல் ஆணைய உத்தரவை ரத்து செய்தார்.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்

இந்த தீர்ப்பை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ், தனது சமூக வலைதளத்தில், “கல்வி ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? அல்லது #DegreeChori என்பதும் சரியா? சும்மா கேட்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.

ஸ்மிருதி இராணி கல்விச் சான்றிதழ் விவகாரம்

இதேபோல், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், “மாணவர்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண்கள், சான்றிதழ்கள் போன்றவை தனிப்பட்ட தகவல்களாகும். அவற்றை பொதுமக்களுக்கு வழங்குமாறு CIC உத்தரவிட்டது முற்றிலும் தவறானது” என்று கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தது.

Exit mobile version