புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்களால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவங்களை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு சார்பில் பிரிவினை கொடுமையின் நினைவு தினம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது:
“நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த எழுச்சி மற்றும் வலியை நினைவுகூரும் வகையில், இந்தியா பிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை அனுசரிக்கிறோம். இந்த நாள், அவர்களின் மன உறுதியை மதிக்கும் நாளாகும். கற்பனை செய்ய முடியாத இழப்புகளை சந்தித்தும், பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, முக்கியமான சாதனைகளை எட்டியுள்ளனர்.
இந்த நாள், நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது என்பது நமது பொறுப்பு என்பதை நினைவூட்டுகிறது,” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.