நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
1966ஆம் ஆண்டு இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) நிறுவப்பட்ட நாளை நினைவுகூர்ந்து, இந்தியா முழுவதும் நவம்பர் 16 தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தையும், ஊடகத்தின் ஜனநாயக பங்களிப்பையும் வலியுறுத்தும் நாளாகவும் இது கருதப்படுகிறது.
இந்தநிலையில், தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்,
“எந்த ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்போரால் அரசு அமைப்புகள் அழுத்தப்படலாம், திசை திருப்பப்படலாம். ஆனால் பத்திரிக்கை மட்டுமே அந்த ஜனநாயகத்தின் ஒளிவிளக்காக இருந்து அதை உயிரோட்டத்துடன் காக்கும் சக்தி கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றிய பாஜக அரசின் “சர்வாதிகார ஆட்சிமுறைக்கு” எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து, அந்த அரசின் தவறுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மக்களை ஏமாற்றும் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி வரும் பத்திரிக்கையாளர்களை தாம் பாராட்டுவதாகவும் பதிவிட்டார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்த செய்தி, ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், பத்திரிகையாளர்களின் துணிச்சலான பணியையும் மீண்டும் நினைவூட்டுவதாக காணப்படுகிறது.

















