ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவருக்கான தண்டனை ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தனது கணவருடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வசித்து, வேலை பார்த்துவருகிறார். அவர் 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கோவையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்தார்.

ஜோலார்பேட்டை அருகே ரயில் வந்தபோது, கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவர் அந்த பெட்டியில் ஏறி, கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அவரை கடுமையாக தாக்கி, ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமந்த்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு எதிரான வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது.

Exit mobile version