விஜய் பிரசாரம் நடைபெறும் பகுதிகளில் இன்று மின்தடை : தவெக கோரிக்கைக்கு மின்வாரியம் ஒப்புதல்

நடிகரும், தமிழக வெற்றிக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் சென்று திறந்த வாகனத்தில் பிரசாரம் தொடங்கினார். காலை 11 மணிக்கு நாகையில் பிரசாரம் ஆரம்பித்த விஜய், வாஞ்சூர் ரவுண்டானில் இருந்து புத்தூர் அண்ணா சாலை வரை பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், விஜயின் பிரசார பாதையில் தற்காலிக மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாஞ்சூர், நாகூர், காரம்பாடி, செல்லூர், புத்தூர், புத்தூர் ரவுண்டான, புத்தூர் அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணமாக, பிரசார நிகழ்ச்சிகளில் விஜயை பார்க்க ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மீது ஏறுவதால் பாதுகாப்பு சிக்கல்கள் எழும் சூழல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர்க்கவே தவெக சார்பில் மின்தடை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதனை மின்வாரியம் ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version