செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி:-
அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார். இதற்காக இபிஎஸ்- க்கு 10 நாட்கள் அவர் காலக்கெடு விதித்துள்ளார். செங்கோட்டையனின் கருத்துக்கு ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்ட கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே, செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மாவின் நூறாண்டு கால கழக வெற்றி கனவை நிறைவேற்ற கழக மூத்த முன்னோடி கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் முயற்சிக்கு அதிமுக தொண்டர்களின் சார்பாக நன்றி என தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
